ரஞ்சன் பயங்கர பிடிவாதகாரன்.... அவன் நினைத்த காரியத்தை செய்யும் வரை ஓய்வெடுக்க மாட்டான் செங்கதிரின் தாய் அடிக்கடி அவனை நினைவூட்டும் போதெல்லாம் தன்நெஞ்சுக்கும் கைக்கும் இடையில் நடக்கும் போருக்கு மத்தியில் வெளிவரும் வார்த்தைகளின் கோர்வையாக கூறுபவை. உண்மையும் அதுவே எடுத்த கருமம் அதில் வெற்றி அடையும் வரை ஓய்வுறக்கம் இன்றி உழைக்கும் தன்மை கொண்டவன்.
தனது ஐந்து வயது முதல் போராட்டத்தின் பிடியில் வதைந்து போனவன். சிங்கள இனவாதத்திற்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாகவே சாதியவாதிகளின் பலத்த அடக்குமுறைகளுக்குள் அடங்கி போகாமல் வீறு கொண்டெழுந்த போராளிகளை உறவுகளாக கொண்டு உதித்தவன் இவன் தனது வீட்டு முன்றலில் தந்தை சாதிய கொடியவர்களால் தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருந்த கோலத்தை கண்டு ஐந்து வயதிலையே போராட்ட குணத்தை தன்னகத்தே உருவாக்கி கொண்டவன்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் இவனை பெற்றவர்கள் இவனுக்கு இட்ட பெயர் இருப்பினும் இவனது செல்ல நாமமாக வழக்கம் கொண்டது ரஞ்சன் என்ற சுருக்க பெயரே, இவனது கற்றல் முறைமையில் போராட்ட குணம் பெரிதும் ஆதிக்கம் செலுத்தியது என்பது இங்கு முக்கியம் பெறுகிறது ஏனெனில் இவன் கற்றலை விட ஆதிக்கவாதிகளையும் சாதியவாதிகளையும் முற்றாக வெறுத்து அவர்கள் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளையே முன்னிறுத்தியிருந்தான்.
பள்ளிக்கு செல்வதை விடுத்து போராட்ட வாழ்வை அரவணைக்க துடித்து கொண்டிருந்தான். இருப்பினும் இவனது உறவினர்கள் இவனின் கல்வியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய காரணத்தால் கற்றல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான் ஆனாலும் இவனது மனம் கற்றலை விட போராட்ட வாழ்வையே நோக்காக கொண்டு செயல்பட ஆரம்பித்திருந்தது. கற்ற பள்ளியில் கூட படித்த சிங்கள மாணவர்களுக்கும் இவனுக்கும் அடிக்கடி மோதல்களும் முரண்பாடுகளும் வளர தொடங்கின. தாம் பெரிய இனத்தவர்கள் என்று இறுமாப்பு கொண்ட உயர் சாதி மாணவர்களுக்கும் இவனுக்கும் இடையில் பலத்த முரண்பாடுகள் வெளிப்பட தோன்றின இந்த நிலையில் தனது கற்றலை முற்று முழுதாக இடைநிறுத்தி தனது போராட்ட வாழ்வில் தடம் பதித்தான்.
முதலில் அவனை கவர்ந்த போராட்ட அமைப்பாக தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் இருந்தது இதன் கொள்கைகள் அவனுக்கு பிடித்து போய் அமைப்பு சார்ந்த பரப்புரை வேலைகளை முன்னேடுத்தான். சேர்ந்தான்.கிராமங்கள் தோறும் சென்று அவ்வமைப்புக்காக மக்களுக்கு பரப்புரை செய்தான். இந்த வேலைகளுக்காகவே தான் கற்க வேண்டும் என்ற நிலை உருவானதால் லெனின், ஸ்ட்ரலின், மாவோசெதும் ஆகியோர் எழுதிய நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புக்களை தேடி வசிக்கத் தொடங்கினான். எப்பொழுதும் மாவோவின் சிந்தனை என்ற சிறிய நூல் ஒன்று அவன் கையில் இருக்கும்.
இந்த நிலையில் அவ்வமைப்பில் இருந்து வெளியேறினான். சில காரணங்கள் அவ்வமைப்பில் இருந்து அவனை வெளியேற்றியது. இருப்பினும் அப்போது சிறு அமைப்பாக இருந்தாலும் ஆற்றலும் சாதுரியமும் மிக்க தலைமையை கொண்ட விடுதலை புலிகள் அமைப்பு அவனை உள்வாங்கி கொண்டது. ஒரு ஆயுத போராளியாக களம் காண புறப்பட்டான். "செங்கதிர்" என்ற இருளகற்றும் சூரியனாக தலைவன் வழிகாட்டலை ஏற்று தனது பணி தொடர நெல்லியடி பிரதேச அரசியல் பொறுப்பாளர் என்ற நிலையோடு களம் இறங்கினான். மக்கள் இவன் கூட நெருங்கி இருந்தார்கள் என்பதை விட இவன் எப்போதும் நெல்லியடி பிரதேச மக்களுக்குள்ளேதான் இருந்தான் என்பது பொருத்தமானது. பல இடர்கள், தேடுதல்கள், காட்டிகொடுப்புக்கள் என்று பயணித்த ஒவ்வொரு மணித்துளியிலும் அவனை அவன் நேசித்த அந்த மக்களே காத்தார்கள்.
சிங்கள இராணுவத்துக்கும் இந்திய வல்லாதிக்க படைகளுக்கும் இடையிலான ஒவ்வொரு போரிலும் களம் கண்டு நிமிர்ந்து நின்றான் அந்த மாவீரன். அன்று ஒரு நாள் தம்பி எங்கட பக்கம் வந்தவன் அன்று ஆயத்து சந்தியில நின்ற இந்தியன் ஆமி.... என்று தொடங்கிய பெரியவரது முகத்தை நோக்கி எமது கண்கள் திரும்பின. இந்தியன் ஆமி தம்பியை பிடிச்சிட்டான். எங்கட பெடியன அவன் கைது செய்ய நாங்க பார்த்து கொண்டு நிக்க ஏலாது எல்லா சனத்தையும் ஒருங்கிணைத்து அவனோட முகாம் நோக்கி போனம் அங்க தம்பி அவங்கள் கூட முரண்பட்டு கொண்டு இருந்தான். விடுதலை செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவங்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தான் என்று நிமிர்ந்த அவர் விழிகளில் இருந்து நீர் வெளிவருவதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
புலிகளின் கொள்கைகளில் ஒன்று உயிருடன் பிடிபட்டால் உயிரை துறக்க வேண்டும் இதற்காக நஞ்சை அருந்த வேண்டும் என்பதற்கு உட்பட்டவனாக குப்பியை தனது வாய்க்குள் வைத்து கொண்டு இந்தியன் இராணுவத்தின் முன் எச்சரிக்கை விடுத்தபடி இருந்த அந்த உத்தமனின் சாவு மனித்துளிகளாக எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன அவனால் கொடுக்கப்பட்டிருந்த நேரக்கெடு முடிவடையும் முன் எமது மக்கள் ஆர்ப்பரித்த பேரலையாக இருந்த வேகம் கண்டு பயந்த இந்திய இராணுவம் அவனை விடுதலை செய்தது. இப்படியாக பல சந்தர்ப்பங்களை தன் உயிர் பிரியும் தருணங்களாக பெற்றிருந்தாலும். இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்திலும் மக்களின் நல்வழிப்படுத்தும் செயற்பாட்டிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டான்.
தியாக தீபம் திலீபன் நல்லூர் முன்றலிலே உருகி கொண்டிருக்க கரவெட்டி பிரதேசத்தில் மாபெரும் மறிப்பு போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தி இந்திய இராணுவத்தை கிலி கொள்ள வைத்தான். வடமராட்சியில் நடைபெற்ற ஒவ்வொரு மக்கள் போராட்டங்களிலும் இவனது செயற்றிறன் முன்னிருத்தப்பட்டிருக்கும் என்பது இங்கு நாம் குறிக்கப்பட வேண்டிய முதன்மை செயற்பாடு.
ஒரு நாள் எதிரியின் முற்றுகைக்குள் அண்ணை நிக்கிறார் எங்களால எப்படி அவர வெளில எடுக்கிறது என்று தெரியாத நிலை காலையில் இருந்து அவரது தொடர்பே இல்லை இராணுவ முற்றுகை விடுக்கப்பட்ட பின் எமது ஆதரவாளர்கள் வீடுகளில் எல்லாம் தொடர்பு கொண்டும் அண்ண எங்க என்று தெரியல்ல, அப்போது எமது போராளி ஒருவன் தான் அவர் தங்கி இருந்த இடத்தை கண்டு பிடித்து அங்கு சென்றான். அவர் தாங்கி இருந்த இடம் ஒரு பெரிய வீட்டு கீழ் தளம் என்று நினைக்காதீர்கள். ஒரு வீட்டின் "மலக்குழி" என்று செங்கதிரின் போராட்ட வரலாற்றை திருப்புகிறார் அவர் கூட நின்ற போராளி ஒருவர்.
உண்மையில் எமது ஒவ்வொரு போராளியும் எத்தகைய தியாகங்களை செய்து மடிந்திருக்கின்றார்கள் என்பது அவர்களது போராட்ட வரலாறுகள் புரட்டப்படும் போது தான் வெளிவரும் விடையங்களாக இருக்கின்றன. கொண்ட கொள்கைக்காக உயிரையே துச்சம் என்று மதித்து போராடிய போராளிகள் வரிசையில் அவர்களின் வீர வரலாறுகளும் நீண்டு கொண்டே செல்கின்றன.
ரஞ்சனுக்கு நண்டு என்றா ரம்ப விருப்பம் சட்டியோட வைச்சு சாப்பிடுவான்... என்று கண்கள் கலங்க தனது ஒன்றுவிட்ட சகோதரனது நினைவை சுமந்த அந்த சகோதரியின் விழிகளை எம்மால் பார்க்க முடியவில்லை. அவன் செத்து விட்டான் என்று கூட எம்மால் நம்ப முடியவில்லை அவன் நண்டு கறியுடன் வீட்ட சாப்பிட்டு 200 மோட்டார் சைக்கிளில போனது இப்பவும் எனக்கு நல்ல ஞாபகம். என்று முடிக்கிறார் அந்த தாய்.
அப்போது விடுதலைப்புலிகள் சிங்களத்துக்கு எதிரான இரண்டாம் கட்ட ஈழ போரை ஆரம்பித்த காலம் விடுதலைபுலிகளின் மத்திய குழு உறுப்பினராக்கப்பட்டு கொள்கை முன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளராக இருந்தான். ஈழ மண் எங்கும் சிங்களத்துக்கு எதிரான போராட்டங்கள் விரிவாக்கம் பெற்று இருந்த நேரத்தில் இவனது மக்களுக்கான போராட்ட கருத்தூட்டல் நடவடிக்கையும் ஈழ மண் முழுவதும் விரிவடைந்திருந்தது. தலைவரதும் எமது போராளிகளதும் கொள்கை சார்ந்த கருத்துக்களையும் சுமந்து கொண்டு ஈழம் முழுவதும் பயணப்பட்டான் செங்கதிர். கருவி ஏந்தி களத்தில் நின்றவன் சொற்கருத்து ஏந்தி மக்களை சந்திக்க புறப்பட்டான்.
20.02.1991 வீட்ட வந்து அத்தான் இந்த நாட்டுக்காக நீங்கள் என்ன செய்தீங்கள்...? என்ற வினாவை என்னிடம் கேட்டான். இதுவரை ஒரு ஆதரவாளராக, கவிஞனாக படைப்பாளனாக நான் இருந்தனே தவிர விடுதலை போராட்டத்தில் வேறெந்த பங்கும் எனக்கு இருக்க வில்லை என்பது உண்மையே... இவனது இந்த வினாவே இவன் வீரசாவுக்கு பின் என்னை விடுதலை போராளியாக மாற்றியது என்றால் அதி எந்த பொய்யும் இல்லை. என்று செங்கதிரின் மைத்துனன் தனது உறவுகளை விட உன்னத இலட்சியமே முதன்மையானது என்ற இவனது நோக்கம் பற்றி விவரிக்கிறார்.
என் கூட 4 நாட்கள் முக்கிய வேலைகளை பகிர்ந்து கொண்டான் பல விவாதங்களில் ஈடுபட்டான். 24.02.1991 காலை புறப்பட்டு சென்றான். மீண்டு வரவே இல்லை. விழிமூடி தூங்கும் மேயர் செங்கதிர் தன் மனைவி கருவில் சுமந்த அந்த சிசு முகம் கூட பார்க்காது விடுதலையின் வீச்சுக்காக தாண்டிக்குளம் மண்ணில் சரிந்தான் என்ற செய்தி மட்டும் தான் எமக்கு வந்தது.
அவன் கனவு என்றும் சுதந்திர தமிழீழம் என்பதாகவே இருந்தது. இன்று அவனும் இல்லை அவனது கனவும் நனவாகவில்லை மாவீரகள் கனவுகள் நனவாக்கப்பட வேண்டும் இன்றைய நிலையில் இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். அன்று செங்கதிர் தன் மைத்துனனை கேட்ட தமிழீழத்துக்காக நீங்கள் என்ன்ற செய்தீர்கள் என்ற வினாவை எமக்கு நாமே ஒரு முறை கேட்டு பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஏனெனில் செங்கதிரின் கனவு நனவாக்கப்பட வேண்டும்.
கவிமகன்
0 Kommentare:
Kommentar veröffentlichen