எனது எழுத்துப் பயணத்தில்.. ஞானப்பழத்தைப் பிழிந்து... -இந்துமகேஷ்.

எனது எழுத்துப் பயணத்தில்..
ஞானப்பழத்தைப் பிழிந்து...
-இந்துமகேஷ்.

1960களின் முற்பகுதி...
எங்கள் வீட்டுக்குப் புதிதாக ஒரு வானொலிப்பெட்டி வந்திருந்தது.
பெரியண்ணா கொழும்பிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தபோது கொண்டு வந்திருந்தார்.

ஏற்கனவே வீட்டில் பாடிக்கொண்டிருந்த "கிராமபோன்" பெட்டியில் சாதாரணத் தோசை அளவிலான இசைத்தட்டுக்களைப் போட்டு "தீன கருணாகரனே நடராஜா!" என்று தியாகராஜபாகவதரும்
"குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.." என்று சி.எஸ்.ஜெயராமனும்

"ஞானப் பழத்தைப் பிழிந்து..!" என்று கே.பி.சுந்தராம்பாளும்
"மலரின் மதுவெல்லாம் இன்னிசைதானோ..?" என்று ஏ.எம். ராஜாவும் அடிக்கடி பாடிக்கொண்டிருந்ததை நிறுத்தி-
"இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு!" என்றும்
"இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு!" என்றும் கேட்கத் தொடங்கியாயிற்று.

ஐந்தாம் வகுப்போடு இராஜராஜேஸ்வரி வித்தியாசாலையிலிருந்து பிரிந்து வீட்டுக்குச்
சற்றுத் தொலைவிலிருந்த மகாவித்தியாலயத்தில் போய்ச் சேர்ந்திருந்தேன்.
வீட்டுக்கும் பாடசாலைக்கும் பதினைந்து நிமிட நடைத்தூரம்.
இராஜேஸ்வரியில் மத்தியானத்துடன் பள்ளிக்கூடம் முடிந்து விடும். மகாவித்தியாலயத்தில் இரண்டு வேளை வகுப்பு. மத்தியானம் சாப்பாட்டு வேளைக்கு முக்கால் மணித்தியாலம்.அந்த இடைவேளைக்குள் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்து அம்மா ஆக்கி வைத்திருக்கும் சோற்றை அவசர அவசரமாக உருட்டி வாயில் போட்டுவிட்டு திரும்பவும் பாடசாலைக்கு
ஓட்டமும் நடையுமாகப் போய்ச்சேர்வது. பின்னேரம் பாடசாலை விட்ட பிறகு ஆறுதலாக நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு வருவது..
இப்போது வானொலிப்பெட்டி வந்தபிறகு விரைவாகவே வீட்டுக்கு வந்துவிடுவேன்.
காலையில் ஓரிரண்டு மணித்தியாலங்களும் பின்னேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலமும்தான் வானொலியில் பாட்டுக்கள் ஒலிபரப்பாகும்.

தேசிய ஒலிபரப்பு, வர்த்தக ஒலிபரப்பு என்று இரண்டு சேவைகள். வர்த்தக ஒலிபரப்பே அதிகமான நேயர்களைக் கவர்ந்திருந்தது. தேசிய ஒலிபரப்பு பின்னேரங்களில் 5 அல்லது 6மணிக்கு ஆரம்பமாகி இரவு 10 அல்லது 11மணிவரை ஒலிபரப்பானதாக ஞாபகம்.
தேசிய ஒலிபரப்பு பலவிதமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தாலும் வர்த்தக ஒலிபரப்பு திரைப்படப் பாடல்களை அடித்தளமாகக் கொண்டு இயங்கியதால் அதிகமான நேயர்களைக் கவர்ந்திருந்தது.

வர்த்தக ஒலிபரப்பின் பிரபலத்துக்கு அப்போது முக்கிய காரணமாக விளங்கியவர் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனன்.
ஒருமுறை தமிழ்நாட்டில் ஒரு விழா நடந்ததாம்.
அந்த விழாமேடையில் விழா அறிவிப்பாளர் இரசிகர்களைப் பார்த்து இப்போது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் உரையாற்றுவார் என்று அறிமுகப்படுத்திவிட்டு ஒருவரை அழைத்தாராம்.

மேடையில் வந்து நின்றவரை எவருக்கும் தெரியவில்லை.
யாரிவர் என்று எல்லோரும் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்க அவர் தனது கம்பீரமான குரலில்"வணக்கம் நேயர்களே! இது இலங்கைவானொலி வர்த்தக ஒலிபரப்பு இப்போது நேரம் மாலை 6.00மணி.." என்று ஆரம்பிக்க இரசிகர்களின் கரகோசம் வானைப் பிளந்ததாம்.
இலங்கைவானொலி வர்த்தக ஒலிபரப்பு தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்புப் பெற்றிருந்ததற்கு இது ஒரு உதாரணம்.

திரைப்படப் பாடல்கள் பலரால் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானபோதும் அது சமூகத்திலும் தனிமனிதரிடத்திலும் ஏற்படுத்திவரும் தாக்கம் அதிகம்தான்.

எனக்குப் பிடித்த பாட்டு என்று ஏதாவதொன்றை உங்களால் நினைத்துப் பார்க்க முடிந்தால் அந்தப் பாடலின் பின்னணியில் ஒரு கதை இருக்கும்.
கதைக்குள் பாட்டு அல்லது பாட்டுக்குள் கதை என்று கற்பனை செய்தால் ஒரு இசையும் கதையும் உருவாகிவிடும்.
பெரும்பாலும் கனவுகளிலே மூழ்கிப்போய்விடுகிற எனது சின்னவயசில்நான் அதிகம் வெட்கப்படுகிறவனாகவும்

( "எப்பவும் தாயின்ரை சீலைக்குள்ளைதான் தலை" என்று எனது அம்மாச்சி என்னைப் பேசுவா) இருளுக்கு அஞ்சுகிறவனாகவும், உறவுக்காரர்களைத் தவிர ஏனைய மனிதர்களுடன் பழகுவதற்குப் பிடிக்காதவனாகவும், எப்போதும் தனிமையைத் தேடுகிறவனாகவும் இருந்திருக்கிறேன். (கண்ட கண்ட பெடியங்களோடை சேர்ந்து திரியப்படாது என்று அப்பா என்னை எச்சரித்து வைத்திருந்ததும் ஒரு காரணம்)

பாடசாலை முடிந்துவந்ததும் பெடியங்கள் கண்ணகி அம்மன் கோவில் மேற்கு வீதியில் கிட்டி, தாச்சி என்று விளையாடிக்கொண்டிருக்கும் மாலை நேரங்களில் நான் வீட்டுக்குள் ஏதாவது புத்தகங்களோடு உறவாடிக் கொண்டிருப்பேன். அப்பாவின் கண்டிப்பு என்னை ஒரு புத்தகப் பூச்சியாக மாற்றுவதற்கு உதவியிருந்தது.


வெறும் கற்பனைக் கதைகளில் மனதைப் பறிகொடுத்திருந்த எனக்கு வாழ்வின் வேறொரு பக்கம் இருப்பதாகக் கற்பித்தவர் தமிழ்வாணன்.
"துணிவே துணை!" என்று பெரிய எழுத்திலும், கல்கண்டு என்பதை சிறிய எழுத்திலுமாகப் போட்டு கல்கண்டை வெளியிட்டு தமிழ்ச் சிறுவர்களின் மனங்களைப் பற்றிக்கொண்ட தமிழ்வாணன், "கல்கண்டு" என்ற இனிப்பான பெயரைச் சூட்டி எதையும் "கண்டு -கல்!" ("காண்பவைகளால் அறிவு பெறு!") என்று உணர்த்தி என்போன்ற சிறுவர்களுக்கு "எழுத்தாள வாத்தியாராக" தன்னை இனம்காட்டினார்.

மத்தியானம் சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வரமாட்டேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு பாண்வாங்கிச் சாப்பிடுகிறேன் என்று சில்லறை வாங்கிக்கொண்டு அந்தக் காசில் மகாவித்தியாலயத்துக்கு முன்னிருக்கும் புத்தகக் கடையில் கல்கண்டு வாங்கி வாசித்த நாட்களும் என் பாடசாலைப் பருவத்தில் அதிகம்தான்.


அதிகமான புத்தகங்கள் தினசரிகள் என்று கொழும்பிலிருந்து வந்தாலும் சிறுவர்களுக்கான கல்கண்டு, கண்ணன் போன்ற புத்தகங்களை ஊருக்குள்ளிருந்த புத்தகக் கடையில் நான் வாங்கினேன்.
என்னுள்ளிருந்த சின்னப்பெடியன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அவனுக்கு மீசை அரும்பிய பொழுதில் அவனிடமிருந்த வெட்கத்தையும், பயத்தையும் பிடுங்கி எறிவதற்கென்று எழுத்தாணி கொண்டு வந்தார் இன்னொரு எழுத்தாளர்.
தமிழ்வாணன்போல் தன்னம்பிக்கைக் கட்டுரைகளை நூலாக்கித்தந்த அந்த எழுத்தாளர்-
தமிழ்நாட்டு எழுத்தாளரான - அப்துற் றகீம்
தங்கள் எழுத்துக்களால் எனக்கு வாழ்க்கைப் பாடம் போதித்தவர்கள் என்று சொல்வதானால் இவர்கள் இருவரையும்தான் முதலில் நினைத்துக் கொள்வேன் எப்போதும்!
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system