" பனி விழும் மலர் வனம்"🌺🌺 அத்தியாயம்- 46❤️



மனம் வேண்டிக்கொண்டாலும் உள்ளூர இனி அவளால் எதையும் தாங்கும் இதயம் இல்லை என்பதை மட்டும் உணர்ந்தாள். காதலிக்கும் போது அழகாக உணர்ந்த இந்தக்காதல் இப்பொழுது சுமையாக,அருவருப்பாகத்தெரிந்தது. அதுவும் அனசன் மேல் அளவு கடந்த கோபத்தை ஏற்படுத்தியது. அவளின் தற்போதைய இந்த நிலைமைக்கு அனசன்தான் காரணம். எல்லா ஆண்களும் ஒரே வகைதானா? காதலிக்கும் போது கண்ணே மணியே என கொஞ்சுவதும், விலகிப்போய் உன் நல் நல்வாழ்விற்காகத்தான் விலகினேன் என நடிப்பதும் இந்த ஆண்களுக்கு கை வந்த கலையோ? மனம் அவனை திட்டி தீர்த்தே வெறுத்தது. அன்று அவளை வெறுப்பதுபோல் எதற்காக நடித்தான் அனசன்? நேரடியாக அவளோடு மனம் விட்டு பேசியிருந்தால் மதுமதிக்கும் சங்கருக்கும் இந்தக்கல்யாண ஏற்பாடு நடந்திருக்கவே மாட்டாது. சங்கர் மதுமதிக்கு உறவுமுறைப்பையன்தான் அவளை நன்கு புரிந்து கொண்டவன்தான் ஆனாலும் எந்த ஆண்மகனுக்கும் தன் மனதுக்குப்பிடித்தவள் வேறு ஒருவருடனும் பழகுவது ஒருபோதும் பிடிப்பதில்லை. தன்காதலியை தனக்கானவள் என அதிக உரிமையும் அன்பும் எடுத்துக்கொள்வான்.சங்கர் ஐரோப்பாவில் வளர்ந்தபோதும் சங்கர் இதற்கு விதிவிலக்கா என்ன? சங்கர் அமைதியாக தன் உணர்ச்சிகளை வெளியே காட்டாத போதும் அன்று கபே பாரில்(bar) அவன் ஒவ்வொரு அசைவும் , பார்வையும் பளிச்சென அவனின் உள்ளத்தை படம் பிடித்துக்காட்டியது.
இந்த உலகமே இருண்டு போனதான உணர்வு மதுமதிக்குள் பரவத்தொடங்கியது. தலை சுற்றத்தொடங்கியது. இதயத்தில் சுள் என்று ஏற்பட்ட வலி தாங்க முடியாது " அம்மா" என கத்தினாள். வேதனைகள், கவலைகள் வாட்டும் நேரத்தில் அன்னையின் மடியில் தலைசாய்த்து அழவேண்டும் போல் இருப்பது இயற்கைதானே. அவளுக்கும் அவ்வாறே இருந்தது .மதுமதி மெல்ல எழுந்து வந்து தண்ணீரைப் பருகினாள். இதமான குளிரில் கூட திடீரென்று மதுமதிக்கு குப்பென்று வியர்த்துக்கொட்டியது . " கடவுளே எதையும் தாங்கும் சக்தியை மட்டும் எனக்குக்கொடுத்துவிடு"
இவற்றை எல்லாம் அசைபோட்ட அவளின் மனதிற்கு இதற்கு ஒரு முடிவை சொல்லத்தெரியவில்லை. அந்த சமயம் அவளின் மனதில் பளிச்சென்று தங்கையின் ஞாபகம் வந்தது..வயதில் இவளை விட இளையவள்தான் ஆனால் எதிலும் நிதானத்துடன் செயற்படுபவள். சிலசமயம் அவளின் சிலசெய்கைகள் அதிரடியாகவும் இருக்கும்.. ஆனால் அவள் பேச்சில் துணிவு, புத்திசாலித்தனம் இருக்கும்
.
தொலைபேசியை மதுவின் தங்கைதான் எடுத்தாள்" என்ன அக்கா உனக்கு என்னாச்சு? ஏன் அழுகிறாய்? " என்ற பாசமான குரலில் மதுவுக்கு ஒரு தெம்பு வந்ததுபோல் இருந்தது. அங்கு நடந்த முழுக்கதையையும் ஒன்றும் விடாமல் கூறினாள். " எனக்கு எந்த முடிவும் எடுக்கத்தெரியலையே.. நானென்ன பண்ணுவேன் நீயே சொல்லு" என்றதும் அதைக்கேட்ட தங்கை என்ன சொல்வதென்று ஒருகணம் நிலைதடுமாறினாள். ஆனாலும் தங்கையின் மனதில் ஒன்றே ஒன்று நிலையாக இருந்தது. காதல் வாழ வேண்டும் .. எந்த சோதனை வந்தாலும் அவற்றைத்தாண்டி அனசனும் தன் அக்காளும் ஒன்று சேர வேண்டும். இந்த கோர விபத்து , அதன்பின்னர் வைத்தியசாலையே வீடாக வாழ்ந்த அனசன் இன்னும் உயிரோடு வாழ்கிறான் என்றால் அதுவும் இந்தக்காதலால் தான். ஊடல் இல்லாத காதல் இங்கேது?? சிந்தித்தவள் " மது அக்கா பிளீஸ் இந்த கல்யாணத்திலை இஷ்டம் இல்லை என சொல்லு..உன் அவசரப்புத்தி செய்த வேலை இது.. இதற்கு நீயே பரிகாரம் தேட வேண்டும் .. பிரச்சனைகனை கண்டு ஓடாதே... நீ துணிவாக அதற்கு முகம் கொடு.. அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன் ஓகேயா? .."" என்றபடி தொலைபேசியை வைத்தாள்.
மதுமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சொல்வது சுலபம் அதை செய்து முடிப்பது தானே கடினம்.. கண்முன்னே சங்கரின் புன்னகை தவழும் சாந்தமான முகம் நிழலாடியது. அருகே குறும்புப்பேச்சும் , கல கல என சிரித்திருக்கும் கனிவான அனசன் முகம் கண்எதிரே ... இருந்தாள்.... எழும்பினாள்.. நடந்தாள்.. சுற்று முற்றும் பார்த்தாள்... மீண்டும் கட்டிலில் வீழ்ந்தாள்.. போர்வைக்குள் புகுந்தாள்.. மூடிய கண்களுக்குள் பலரின் உருவங்களும், காதுகளில் பலரின் சிரிப்பொலி ஓசையும் நாசகாரமாக கேட்டது..

பேய் பிடித்தவள் போல் மாடிப்படிகளை விட்டு இறங்கியவளை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சங்கர் அவதானித்தான். "" மது என்ன இந்த கோலம் .. எங்கே போகிறாய்? " மதுவிற்கு எதையும் கேட்கும் நிலையில் இல்லை .. இல்லை கேட்காதவள் போல போகிறாளா? .. மதுமதி கதவை பலமாக சாத்தும் ஓசை மட்டும் சங்கர் காதில் கேட்டது.

மதுமதி தான் வாழ்ந்த கிராமத்தை தாண்டி நடந்தாள். சிறிய நீரோடையும் அருகே அரும்பி மஞ்சள் வர்ணத்தில் பூத்திருந்த மலர்கள்(påske liljer)அவளைப்பார்த்துச் சிரித்தன. மரங்களில் இளவேனிற்காலத்தை வரவேற்று பாடிய பறவைகள் கூட்டம் கூட்டமாக அவளை கடந்து சென்றன.. அவற்றை இரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.. விதைப்புக்குத் தயாராக பண்படுத்தப்பட்ட நிலங்கள் அழகாக காட்சியளித்தன.. பச்சைப்புல்வெளிகளும் அதன் மேல் படிந்துள்ள பனித்துளிகள் ஆதவன் கரம் பட்டு கரைவதை பார்க்கின்ற மனம் அவளிடம் இல்லை.. இன்னும் சற்று வேகமாக நடந்தாள். இதமான வெயில் பொன்னிறமேனியை தொட்டு செல்வதை உணர்ந்திலள்.. உணர்வற்ற ஜடமாக அவள் கால்கள் மட்டுமே நடந்தன. யாருமேயற்ற ஒரு வெளியில் தனித்துவிடப்பட்டவளாய், திக்குத்தெரியாத காட்டில் தன்னந்தனியே நிற்கும் புள்ளிமானாக நடந்து கொண்டே இருந்தாள்..

அங்கு அவளை கடந்து சென்ற அந்த காட்டு முயல் ( hare)மீது பார்வை குத்திட்டு நின்றது. என்ன வேகமான பாய்ச்சல்? தன்னுயிரை காப்பாற்றிக்கொள்ள முட்கள் செடிகள் பற்றைகளைத்தாண்டி அந்தச் சின்ன உயிர் ஓடியதைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. வேட்டைநாயொன்று நாக்கை தொங்கப்போட்டபடி வேகமாக அதை பின் தொடர்வதை பார்க்க முடியவில்லை.. பின்னே இரு வேட்டைக்கார்ர்கள் கையில் வேட்டைத்துப்பாக்கியோடு வந்து கொண்டிருந்தனர். வேட்டையாடுதலை தம் பொழுதுபோக்காக டெனிஸ்மக்களில் சிலர் கொண்டிருந்தனர். இவளைக்கண்ட அவர்கள் மென் முறுவலுடன் கடந்து சென்றனர். " ஆண்டவா அந்த குட்டி முயல் தப்பி விட வேண்டும்" பிரார்த்தித்தாள். அந்த இடத்தில் நின்றாள்.. துரத்தி சென்ற வேட்டைநாய் அவர்களிடம் திரும்பி வந்தது. ஆனால் அந்த நாயின் கண்களில் கொலைவெறி தண்டவமாடியது. "" ஆண்டவா நன்றி" கை கூப்பினாள்" ஒரு மரத்தின் கீழ் அவர்கள் அமர்ந்தார்கள்.

"தன்னுயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த காட்டுமுயல் ஓடுவது போல் ஏன் நான் ஓட வேண்டும்? எனை யார் துரத்துகிறார்கள்?? நான் தான் ஓடுகிறேன்.. இந்த வாழ்க்கையைப்பார்த்து ஓடுகிறேன்.. நில் எதிர்த்து நில்.. துணிந்து விடு.." சொன்னது அவள் மனது. நின்றாள்... திரும்பிப்பார்த்தாள். எங்கு அவள் நிற்கிறாள் என்பதே அவளுக்குத்தெரியவில்லை. ரெலிபோன் பற்றறி 30% இருப்பதாக காட்டியது. கண்ணுக்கு எட்டியதூரம் வரை எவரும் இல்லை அந்த வேட்டைநாயையும், வேட்டைக்கார்ரையும் தவிர. தெரியாதவர்களிடம் வழி கேட்பதும், எங்குதான் நிற்பதாக கேட்பதும் புத்திசாலித்தனமல்ல.. " அவளின் மனம் கட்டளையிட்டது. ஆனால் பயம் மனதை சற்று கவ்விக் கொண்டபோதும் ஏதோ அசாத்திய துணிச்சல் வருவதை உணர்ந்தாள் .. திரும்ப வந்த வழியே நடக்க ஆரம்பித்தாள்.. அந்த வேட்டைக்கார்ர்கள் குடிபோதையில் நிற்பது தெரிந்தது.. குடிப்பவர்களை கண்டாலே மதுமதிக்கு பிடிப்பதில்லை.. அதுவும் தன்னந்தனியே அங்கு அவர்களுடன் அவள் நிற்பதும் பிடிக்கவில்லை.. அவளை அவர்கள் அழைப்பது போல் இருந்தது.. இல்லை பிரமையோ?? சற்றுஉடல் நடுங்கத்தொடங்கியது...,
( தொடரும்)
ஆக்கம் ரதி மோகன்❤️
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system