சண்முகதாசனும்
நாகலிங்கம் சண்முகதாஸன் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த பெரும் சிந்தனையாளரும் செயல்வாதியுமாவார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தத்துவார்த்த தளத்தில் சீனச்சார்பு, மொஸ்கோ சார்பு என1960 களின் பிரிந்த போது சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலமை தாங்கி அக்கட்சியின் தத்துவ வாதியாக அவர் திகழ்ந்தார்.
அவருடனான எனது உறவு 1964 களிலே ஆரம்பமானது. நாம் அப்போது 20 வயது இளைஞர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தோம். இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருந்தோம்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவரை முதன்முறையாகச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது
தோழர் என்று அவரை நாம் அழைத்தாலும் மிகுந்த மரியாதையுடன் அவரோடு பழகினோம்.
மட்டக்களப்பு வாலிபர் சங்கத்தின் அழைப்பின்பேரில் 1967களில் மே தினக் கூட்டத்திற்கு அவரும் எஸ்.டி.பண்டாரநாயக்காவும் வந்தமையும் அவரை நாம் வரவேற்றமையும் அன்று அவர்கள் கஷ்டப்பட்ட பொதுமக்களின் பிரச்சனைகள் பற்றியும் தொழிலாளர் விவசாயிகளின் வாழ்நிலை பற்றியும் அவர்களின் ஒற்றுமையினாலும் போராட்டத்தினாலும் பெறும் புதிய உலகத்திலேதான் சமதர்ம வாழ்வு உருவாகும் என ஆற்றிய உரையும் இன்றும் காதி ஒலிக்கிறது..
அன்று இளம் பருவத்தில் துடிப்போடு இருந்த எம்போன்ற இளைஞர்கள் அவர்பேச்சால் ஈர்க்கப்பட்டோம்
நீரழிவு நோய்க்குள்ளாகியிருந்த அவரின் உணவிலும், ஓய்விலும் அன்றைய இளைஞரான நாம் மிகவும் அக்கறை காட்டினோம்.
காலகட்டமும் போராட்டமும்
அறுபதுகளுக்குப் பிற்பகுதியும் எழுபதுகளின் முற்பகுதியும் இலங்கை வரலாற்றில்முக்கிய காலகட்டமாகும்.
இக்காலகட்டம் ஈழத்துத் தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கிய காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரம் மிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.
இக்காலகட்டத்திலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களைத் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்குத் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரை தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடாத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும் அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு.சி.சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் என அழைக்கப்பட்டோர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையும் தமிழ் கூறும் நல்லுகம் வியப்போடு பார்த்த காலம் இது.
அப்போராட்டம் ஈழம் எங்கணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனை கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச்சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தமது எழுத்துக்களாலும் செயற்பாடுகளாலும் சத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.
அப்போராட்டத்தில் இளம்போராளிகள் பலர் உருவாகினர். அவ்வுரிமைப்போரில் பங்கு கோண்டோருக்கு மாசேதுங் சிந்தனைகளும், மாபெரும் சீனக்கலாச்சாரப் புரட்சியும் ஆதர்சனங்களாயின.
தமிழர் மத்தியில் காணப்பட்ட தீண்டாமைக்கும் சாதிக்கொடுமைக்கும் எதிராகச் சாதிபேதமற்று கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒன்று திரண்டனர்.
வெளிப்பாடுகள்
சாதி எதிர்ப்புக் கவிதைகள், கதைகள், நாடகங்கள், ஓவியங்கள், எனப்பல புரட்சிகரக் கலைப்படைப்புள் வெளிவந்தன. ஓவியப் புத்தக கண்காட்சிகள், கருத்தரங்குகள். நடந்தேறின. இலக்கியம் பிரசாரம் செய்யலாமா? ஏன்ற காரசாரமான விவாதங்கள் நடந்தேறின. எல்லா விவாதங்களுக்குமப்பால் இக்கலை இலக்கியங்கள் களத்தில் நின்று போராடிய பேராளிகளுக்கு உற்சாகம் ஊட்டின. பலம் தந்தன.
அப்போராட்டவரலாற்றையும், பேராட்ட வீரர்களையும், அக்காலத்தில் அப்போராட்டத்திற்குச் சார்பாக எழுந்த இலக்கியங்களையும் இன்றைய தலைமுறையினர் அறியார். தமிழர் வரலாறு, தமிழ் கலை இலக்கிய வரலாறு அவற்;றைக் குறிப்பிடவில்லை.
இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்?
வாதங்கள்
இக்காலகட்டத்திலேதான் கூத்தை புதிய திசைகள் நோக்கி வளர்ப்பது சம்பந்தமான விவாதங்கள் எழுந்திருந்தன. சீனாவில் கலாச்சார புரட்சியின் போது அவர்கள் மக்களை எழுச்சி பெற வைக்க பாரம்பரிய சீன ஒபெரா (நாடகம்) வை மாற்றியமைத்தமை இவை பற்றி விவாதித்தோருக்கு ஆதர்சனங்களாயின.
பழைய நிலப்பிரபுக்களுக்கு பதிலாக தொழிலாளர் விவசாயிகளையும், பொதுமக்களையும் சீன ஒபெரா தனது கருவாகக் கொள்ளலாயிற்று.
வெண்முடி நங்கை றெட் லன்ரன் போன்ற சீன புரட்சிகர ஒபெராக்களை( அசையும் படத்தில் பார்க்கும் வாய்ப்பு கிட்டின.
முன்னுதாரணமாக நெல்லியடியில் காத்தான் கூத்துப் பாணியிலமைந்ததும் கோயில் உள் நுழைவுப் போராட்டம் சம்மந்தமானதுமான கந்தன் கருணை நாடகம் தோற்றம் பெற்றது.
இக்காலகட்டத்தில் மஹாகவியின் கோடை, முருகையனின் கோபுரவாசல், மற்றும் குடிநிலம் போன்ற நாடகங்கள் சாதி ஒடுக்குமுறை பற்றிப் பேசின.
இப்பின்னணியில் தான் சங்காரமும் உருவானது.
சீனக் கலாசாரப்புரட்சி பற்றியும் சீன ஒபெரா நாடகம் எவ்வாறு பழமையிலிருந்து புதுமை நோக்கிச் செல்கிறது என்பனவற்றை விவாதங்கள் மூலம் அறியும் வாய்ப்புக்கிட்டியது.
இவற்றை எமக்கு அறிமுகம் செய்ததோடு வங்காளத்தின் புரட்சிகரக் கலைஞனான உத்பால் தத்தையும் மரபு வழி நாடகமான வங்காள யாத்திராவை எப்படி மக்கள் பிரச்சினை கூறும் மக்களுக்கு எழுச்சி ஊட்டும் நாடகமாக அவர் மாற்றினார் என்பதனையும் கைலாசபதி எமக்கு உணர்த்தினார்
.பழமையான திசையினின்று மாறி கூத்து புதுமை நோக்கிப் பிரயாணம் தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டதெனப் போதித்தார்.
சாதி ஒழிப்புப் போராட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்ட செயல்வாதிகளுள் முக்கியமானவர் சண்முகதாசன். பரம்பரிய குடும்பத்திலிருந்து வந்த அவர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
லும்பினி அரங்கில் மாநாடும் சங்காரமும்
1969 இல் கொழும்பில் லும்பினி அரங்கிலே நடைபெற்ற தீண்டாமை ஒழி;ப்பு இயக்க மாநாட்டில் சங்காரமும் குடிநிலமும் மேடையேறின. சங்காரத்தைத் தயாரித்தது மட்டக்களப்பு நாடக சபா.
எழுதி இயக்கியது மௌனகுரு.
ராஜா ராணிக் கதைகளையும் மகாபாரத இராமாயண கதைகளையும் கருப்பொருளாகக் கொண்டிருந்த மட்டக்களப்பு வடமோடி நாடக மரபுக்குள் சாதி பேத எதிர்ப்பு சமூக விடுதலை என்பவற்றை உள்ளடக்கமாக வைத்து நெய்யப்பட்ட நாடகம் அது. சாதி அரக்கனைச் சாய்த்த கதை என்ற இந்நாடகத்திற்கு ‘சங்காரம் என்ற நாமகாணம் சூட்டியவர் மறைந்த பெரும் கவிஞர் முருகையன்
.
1969 இல் சங்காரம்
லும்பினி அரங்கிலே 1969 இல் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டிற்கு லக்சுமண ஐயர் தலைமை தாங்கினார். நுஃமான்,முருகையன், சில்லையூர் செல்வராஜன், சுபத்திரன் ஆகியோர் கவிதை பாடினர். சண்முகதாசன் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சங்காரம் நாடகத்தை சண்முகதாசன் அன்று முழுமையாக இரசித்தார். நாடகம் முடிய என்னையும் நடிகர்களையும் (நானும் அதில் தொழிலாளர் தலைவனாக நடித்திருந்தேன்) நேரில் வந்து கைலாகு தந்து பாராட்டினார். அன்றைய கட்சிப் பத்திரிகையான தொழிலாளியில் வழமையாக அரசியற் கட்டுரைகள் எழுதும் அவர் எம்மைத் திகைப்பிலாழ்த்தும் வண்ணம் சங்காரம் பற்றியும் எழுதியுமிருந்தார். அவர் எழுதியவை இவைதாம்
.
‘மட்டக்களப்பிலிருந்து கொண்டு வரப்பட்ட வடமோடிக் கூத்தில் அவர்கள் எடுத்த முயற்சி புதுமையானது. இவ்வகையான ஒரு முயற்சியை நான் இதுவரை காணவில்லை. இக்கூத்தில் சரித்திரவியல் பொருள் முதல் வாதக்கருத்துக்களைத் திறமையாகக் கையாண்டிருந்தார்கள். அவர்கள் தாளத்திற்கு ஆடிய ஆட்டத்தை சபையோர் நன்கு ரசித்துக் கரகோஷம் செய்தனர். சமுதாயம் சுதந்திரமாகவே தோன்றியது. பின்பு அடிமைப்படுத்தப்பட்டது. அதனைத் தொழிலாளர்களும் விவசாயிகளும் சேர்ந்து விடுவித்தனர் என்பதுதான் கதை. சில திருத்தங்கள் தேவைப்படினும் அவை பிரமாதமாய் இருந்தன என்று சொல்லலாம். இதனைப் பார்க்கத் தவறியோர்கள் ஒரு நல்ல கலை விருந்தைத் தவறவிட்டவர்களாவர். இது மேலும் திருத்தப்பட்டு மேடையேற்றப்படுமென நம்புகிறேன்.’
அதன் பின்னர் சண்முகதாசனையும், கைலாசபதியையும் ஒரு சேரச் சந்தித்து இந்நாடகம் பற்றிக் கதைப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டது. நாடகம் பற்றி இருவரும் கூறியவை எனக்கு மிகுந்த பிரயோசனமாயிற்று.
சண்முகதாஸன் சங்காரம் நாடகத்தின் அபிமானியானார். எனக்கும் அவருக்குமான உறவுகளும் சற்று நெருக்கமாயின.
1970 களில் கொழும்பிலிருந்த எங்கள் குழு எனும் நாடகக்குழு இந்நாடகத்தை மீண்டும் லும்பினியில் மேடையேற்றியது. முன் வரிசையில் சண்முகதாஸன் வந்து அமர்ந்திருந்தார்.அவர் வருகை எனக்கும் நடிகர்களுக்கும் பெரும் உற்சாகம் ஊட்டியது அம்மேடை ஏற்றத்தில் . முந்தியலிருந்து சிற்சில மாற்றங்கள் செய்திருந்தேன்.நாடகம் முடிய வந்து உரையாடி அனைவரையும் பாராட்டிச் சென்றார்.
1980 களில் சங்காரம்
1980 களில் நாடக அரங்கச் கல்லூரி யாழ்ப்பாணத்தில் வடமோடி நாடகமொன்றை மேடையிட விரும்பிச் சங்காரத்தைத் தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் விட்டது. பிரான்சிஸ்ஜெனம், சோ . தேவராஜா, ஏ.ரி.பொன்னுத்துரை, ருத்ரேஸ்வரன், சிதம்பரநாதன், அரசையா போன்ற பெரும் கலைஞர்கள் சங்காரம் தயாரிக்கத் துணையாக நின்றனர் .. குழந்தை சண்முகலிங்கத்தின் பேருதவியும் கிடைத்தது.அவர்தான் அந்நாடகத்தின் தயாரிப்பாளர்.நான் நெறியாளராக இருந்ததுடன் நடிகனாகவும் பங்கு கொண்டேன்.
1980 ன் கடைசிப் பகுதியில் சங்காரம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறிப் பெரும் வரவேற்றப் பெற்றது. அரங்கம் நிறைந்த (ர்ழரளந குரடட) கட்சியாக பல தடவைகள் மேடையேறியது.
அதுபற்றி காட்டமான விமர்சனங்களும் எழுந்தன. ஏ.ஜே.கனகரத்தினா, சமுத்திரன், நா.சுந்தரலிங்கம் ஆகியோர் அவ்விவாதத்தில் கலந்து கொண்டனர்.
ஆரோக்கியமான விவாதங்கள் அவை
1980 களின் முற்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், கொழும்பு ரவர் அரங்கிலும் இப்புதிய சங்காரம் மேடையேறியது.
இக்காலகட்டத்தில் கொழும்பில் ஒரு அமைப்பு சங்காரத்தை ரவர் மண்டபத்தில்
மேடையிட பண உதவி புரிந்தது.
ரவர் அரங்கில் சண்முகதாஸன்
அன்றைய தினம் பின்னேரம் அரங்கின் பின் அறையில் நடிகர்கள் ஒப்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். தனது ஒப்பனையை முடித்துக் கொண்ட நடிகர்களுள் ஒருவர் (ஜெனம் அல்லது ருத்ரேஸ்வரன் என நினைக்கிறேன் ) திரையை மெல்ல விலக்கி அரங்கைப் பார்க்கிறார். அரங்கில் ஓரிருவர் தெரிகிறார்கள். சனம் வரவில்லை என்ற சோர்வு இவர்கட்கு.
நடிகர்கட்கு சனக் கூட்டத்தைக் கண்டால்தானே ஆனந்தம்.
என்னிடம் வந்து துயரத்துடன் ஒரு நடிகர் கூறுகிறார்.
சனம் வரவில்லை சேர்
நான் வந்து திரை இடுக்கினுள்ளால் மண்டபத்தைப் பார்க்கிறேன்.
சனம் மிகமிகக் குறைவுதான்.
என்ன ஆச்சரியம் முன் வரிசையில் சண்முகதாஸன்.அமர்ந்திருக்கிறார்
எனக்கோ மிகுந்த உற்சாகம்
அவருக்கு உடல் நலமில்லை என்றும் நடமாடமுடியாது நிலையில் வீட்டில் ஓய்வில் இருக்கிறார் என்றும் அறிந்திருந்தேன். உடல் நலத்தையும் பொருட்படுத்தாது முன்வரிசையில் அதே கம்பீரத்துடன் சண்முகதாஸன், சங்கார அபிமானி சண்முகதாசன்
நான் நடிகர்களையெல்லாம் நாடகம் ஆரம்பமாகுமுன் தயார்ப்படுத்தும் பொழுது கூறினேன்.
சங்காரம் உருவாக்கலிலும் அதன் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவரும், சங்காரத்தின் ரசிகரும் முக்கியமாக தொழிலாளர்களின் தலைவருமான சண்முகதாசன் வந்திருக்கிறார்.
அவர் ஆயிரம் பொதுமக்களுக்குச் சமன்.அவர் முன்னால் நாம் நாடகம் போடுவது ஆயிரக்கணக்கான தொழிலாளர் முன் போடுவதற்குச் சமன். நன்றாகச் செய்யுங்கள். தோழர் சண்முகதாசனின் மனம் மகிழச் செய்யுங்கள்.
மிகுந்த உற்சாகத்தோடு நடிகர்கள் நடித்தார்கள் அன்றைய மேடையேற்றம் மிகச் மிகச் சிறப்பாக இருந்தது.1969 இல் கண்ட சங்காரம் வேறு. அன்று சண்முகதாசன் கண்ட சங்காரம் வேறு.
நாடகம் முடிய மேடைக்கு வந்து சண்முகதாசன் அனைவரையும் வாழ்த்திச் சென்றார். சங்காரம் ஆற்றுகை 1983இல் பெற்ற மாற்றங்களைச் சிலாகித்துச் சென்றார்.
அவரை நான் கண்டது கடைசி நாள் அதுதான்.
சண் ஒரு கடும் போக்களார் என்று பெயர் எடுத்தவர். அவர் எழுத்தும் பேச்சும் மெத்தக் கறாராக இருக்கும்.
இறுதி காலத்தில் அவர் கழிவிரக்கப்படாமல் இருந்தமைக்கான காரணம் அவரது கழிவிரக்கப்படாத வாழ்வுதான். ஆம் அவர் ஒரு கழிவிரக்கப்படாத கம்யூனிஸ்ட்.
அவரது அரசியலோடு மாறுபடுபவர்கள் அவரது நேர்மையை ஒரு போதும் சந்தேகிக்க மாட்டார்கள்.
சண்முகதாசன் அரசியிலில் கடும் போக்குடையவராயிருந்தாலும் அவர் நல்ல நகைச்சுவையாளர். சண் சிரிப்பது அருமை. எனினும் சிரிக்கும் படியாக பேசுவார். கொடுப்புக்குள் எப்போதும் ஒரு சிரிப்பிருக்கும்
அவர் நிறைந்த வாசகர்.
நல்ல இலக்கியங்கள், நாடகங்கள் என்பனவற்றிலும் கலைகளிலும் அவருக்கு நாட்டமும் பரிச்சயமும் இருந்தமையை அவரது உரையாடல்கள் வெளிப்படுத்தும்
சிறந்த கம்யூனிசத் தலைவர்களான கார்ல்மார்க்ஸ், மாவோ லெனின் போன்றவர்களும் கலா ரசிகர்கள்தான்
சன்முகதாசனுள்ளும் ஒரு மகா ரசிகன் இருந்திருக்கிறான்.
இத்தகைய பெருமையும் திறனும் கலை ஆர்வமும் கொண்ட சண்ணை சங்காரத்தின் அன்றைய மேடையேற்றத்தின் போதுதான் கடைசியாகச் சந்திக்கிறேன்.
நான் அவரைச் சந்தித்த கடைசி நாள் அது.
சங்காரத்தின் சில மேடை நாடகப் பாடல்களை அண்மையில் அரங்க ஆய்வு கூடத்தால் கொழும்பில் நடைபெற்ற தேசிய கலை இலக்கிய பேரவை இலக்கிய மாநாட்டில் நிகழ்த்திக் காட்டினோம். .தேவராஜா,கலாலச்மி பேராசிரியர் சிவசேகரம் போன்ற பழையவர்களும் இளம் தலைமுறையினரும் குழுமிருந்தனர்.
சங்காரப்பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்ட அவர்கள் மீண்டும் சங்காரம் நாடகத்தை மேடையிடும் படி கேட்டனர்.உற்சாகம் தருகின்றனர்.
தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு நன்றி.
அவர்கள் தரும் உற்சாகம் எம்மைச் செயலுக்குத் தூண்டுகிறது.
விரைவில் மீண்டும் சங்காரம் மேடையிடப்படலாம்.
சங்காரம் இருக்கிறது அது மேடையிடப்படவும் இருக்கிறது ஆனால் முன்வரிசையில் கம்பீரமாக வந்திருந்து அதனைப்பார்க்க சண்முகதாசன்தான் நம் மத்தியில் . இல்லை.
1983இல் யாழ்ப்பாணத்து வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறிய நடைபெற்ற சங்காரத்தில் ஒரு காட்சி அரக்கர்களாக றேமன்,பிரான்சிஸ் ஜெனம் .உருத்ரேஸ்வரன்,தனபாலசிங்கம்
சமுதாயமாக கலாலச்மி
0 Kommentare:
Kommentar veröffentlichen